பருத்தியனின் வலைப்பதிவு உங்களை அன்புடன் வரவேற்கின்றது

வியாழன், 29 ஏப்ரல், 2010

நாம் பயங்கரவாதிகளா???




தமிழர்கள் பயங்கரவாதிகள் என்று கூறுவோர் மனச்சாட்சியுடன் எம்முன்னால் வரட்டும்!!!

தமிழர்களின் 60 ஆண்டுகால போராட்டம் பல பரிமாணங்களைச் சந்தித்து, இன்று அது வித்தியாசமான ஒரு பரிமாண நிலையில் வந்து நிற்கின்றது. முதல் 30 வருடகால அகிம்சைவழிப் போராட்டங்களோடு தொடர்ந்த தமிழர்களின் போராட்டம் பயனற்றுப்போக பொறுமையிழந்த நிலையில் அடுத்தகட்டமாக ஆயுதப்போராட்டம் உருப்பெற்றது.உலகமே வியக்கும் வகையில் எழுச்சிபெற்ற தமிழர்களின் ஆயுதப் போராட்டம் புலிகளின் தலைமையில் கடந்த வருடம் 2009 மே 18 வரை தொடர்ந்தது.

தமிழர்களின் விடுதலைப் போராட்டம் "பயங்கரவாதம்" என்ற போர்வையில் சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் கூடிய மேற்பார்வையில் சிதைக்கப்பட்டது. இதனால், கண்முன்னே தெரிந்த தமிழர்களின் தேசவிடுதலை இன்று கேள்விக்குறியாக கண்ணுக்கெட்டாத தொலைவில் எங்கேயோபோய் நிற்கின்றது.
இலட்சக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்த்தியாகங்கள், பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் விலைமதிப்பில்லாத உன்னத உயிர்க்கொடைகள் அனைத்தையும் "பயங்கரவாதம்" என்ற ஒற்றை வார்த்தைக்குள் அடக்கி, கேவலப்படுத்தி சிதைத்து நிற்கின்றது சர்வதேசம். சிங்கள வல்லாதிக்கம் தமிழர்களின் எதிரி. அது எப்பொழுதுமே எம்மை எதிரியாகவே பார்க்கும். அது தமிழர்களை பயங்கரவாதி எனும்... தீவிரவாதி எனும்... அதற்கு மேலேயும் சொல்லும். கொல்பவனுக்கு சொல்வதெல்லாம் சாதாரணம்!!! ஆனால் சர்வதேசம் எமக்கு செய்தது அநீதியிலும் அநீதி. இன்னமும் தமிழர் விடயத்தில் அதையே செய்துகொண்டிருக்கின்றது.
நடுநிலை, மனிதநேயம், மனித உரிமைகள் என வார்த்தைக்கு வார்த்தை தவறாமல் உச்சரிக்கும் சர்வதேசத் தலைவர்களும், மனித உரிமைகளைக் கட்டிக்காக்க வேண்டிய ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அமைப்பாளர்களும் ஈழத் தமிழர்களின் அவலங்களை மட்டும் கண்டுகொள்ளாமல் தவறவிட்டதேன்???

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள். அவர்களின் தலைமையில் நடக்கும் தமிழர்களின் போராட்டமும் பயங்கரவாதம். இது.... சிங்களதேசம் ஓதிய மந்திரம். ஆனால் அவர்களே மறந்தாலும் சர்வதேசம் அதை தாரகமந்திரமாக வரித்துக் கொண்டது. 2002 ஆம் ஆண்டிற்குப் பிற்பாடான சமாதான காலத்தில் இலங்கையில் புலிகளுக்கான தடை அகற்றப்பட்டிருந்த போதிலும், சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த புலிகள் அமைப்பு மீது பல சர்வதேச நாடுகளில் புதிதாக தடைகள் விதிக்கப்பட்டன என்பது இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

தமிழர்கள் சர்வதேசத்திற்கு என்னதான் பாவம் செய்தார்கள்? ஏன் இவ்வாறு தமிழர்களை சர்வதேசம் தண்டிக்கவேண்டும்?? தமிழர்களை தண்டிக்க சர்வதேசத்திற்கு அருகதை இருக்கின்றதா???

உலகெங்கும் வாழும் தமிழர்களே!
ஒன்றைமட்டும் நன்கு விளங்கிக் கொள்ளுங்கள்! "தமிழனுக்கென்று இன்று ஒரு தேசம் இல்லை" என ஏங்குகின்றீர்களே!? இந்த இழிநிலையை உருவாக்கியதே இந்த சர்வதேசந்தான்! வரலாற்றின் முன் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், வெள்ளையர்களின் ஆட்சிக் காலத்திற்கு முன் இலங்கையில் தமிழ் இராச்சியம், சிங்கள இராச்சியம் என தனித்தனியான தேசங்களே இருந்துள்ளன. அன்று தமிழர்களுக்கான தனியான தேசம் என இருந்துள்ளது.அதற்கு வரலாற்று ரீதியிலான ஆதாரங்களும் உள்ளன. இதே நிலைதான் இந்தியாவிலும். சோழ நாடு, பாண்டிய நாடு என தமிழருக்கான தனித்தனியான நாடுகள் இருந்துள்ளன. ஆனால், வெள்ளையர்களின் வருகைக்கு பின்னர்... குறிப்பாக பிரித்தானியரின் ஆட்சியில் தமது நிர்வாக இலகுத்தன்மைக்காக அனைத்துப் பிரதேசங்களும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே நாடாக உருவாக்கப்பட்டன. தனித்தேசத்தில் தமது சுதந்திரமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்த தமிழர்களின் சுதந்திர வாழ்வுரிமைக்கான அத்தியாயம் அத்தோடு நிறைவுக்கு வந்தது.

இறுதியில், சுதந்திரம் கொடுக்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு சென்றவர்கள் தமிழர்களின் சுதந்திரத்தினை மட்டும் பறித்துவிட்டுச் சென்றனர்.அன்று வெள்ளைக்காரப் பாட்டன்மார்கள் சொல்லிவிட்டு, செய்துவிட்டுப் போனதை இன்று சர்வதேசத்தில் நீதியினை நிலைநாட்ட முனைவதாய் காட்டிக்கொள்ளும் வெள்ளைக்காரப் பேரன்மார்களும் பின்பற்றி... அதையே தொடர முனைகின்றார்கள். வரலாற்று ரீதியிலான இந்தக் காரணங்களோடு தற்போதைய பிராந்திய வல்லாதிக்கம்,பொருளாதாரப் போட்டிகளும் முண்டியடித்து ஒட்டிக்கொண்டன. இவர்களின் சுயநலன்களுக்கு தமிழர்கள் பலிக்கடா ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். தமிழர்களின் வாழ்வுரிமை, சுதந்திரம் என்பவை பறிபோயுள்ளது.

உண்மையிலே தமிழர்களின் பிரச்சினைகளுக்கு மூலகாரணமே சர்வதேசம் தான். இவர்கள் தமிழர்கள் விடயத்தில் இழைத்த தவறினை இவர்களேதான் திருத்திக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் வெள்ளை இனத்தவர்களை உள்ளடக்கிய சர்வதேச தலைவர்களுக்கு தமிழர்களுக்கான நீதியினை பெற்றுக் கொடுக்க வேண்டிய கடமையும் கடப்பாடும் இருக்கின்றது. ஆனால் இவர்களோ தமிழர்களின் நீதியான விடுதலைப் போராட்டத்திற்கு பயங்கரவாதச் சாயம் பூசுவதிலேயே குறியாய் இருக்கின்றார்கள்.
நாம் மாற்றான் மண்ணில் பங்கு கேட்கவில்லை! நாம் காலங்காலமாக வாழ்ந்து வந்த நமது பூர்வீக நிலத்தினையே நாம் கேட்கின்றோம்? எமது சுதந்திரமான வாழ்வுரிமையையே எதிர்பார்க்கின்றோம்! எமது தேவையெல்லாம் எமது சொந்த மண்ணில் அமைதியான சுதந்திரமான வாழ்க்கை என்பதுதான். அதைக் கொடுப்பதில் சிங்களவரைவிட இவர்களுக்கு அப்படியென்ன கஷ்டம்?

எமது சுதந்திரத்துக்காக நாம் இழந்தவை மிகமிக அதிகம். இன்றும் இழந்துகொண்டே இருக்கின்றோம். எமது நியாயமான விடுதலைப் போராட்டத்தினை பயங்கரவாதம் என்று சொல்லும் சர்வதேசமே! உனக்கு மனச்சாட்சி என்று ஒன்றிருந்தால், எம்முன்னே வா! ஒரு நாளைக்கு மட்டும் தமிழனாய் வாழ்ந்துபார்! எமது வலிகளை ஒரேயொருநாள் மட்டும் அனுபவித்துப் பார்! அப்போது தெரியும்! அதன்பின் நீயே சொல்!... நாம் பயங்கரவாதிகளா என்று...?!

எத்தனை தியாகங்கள்! எத்தனை உயிர்க்கொடைகள்! எத்தனை இழப்புக்கள்! எத்தனை வலிகள்! எத்தனை வீரம்! வெற்றியிலும் தோல்வியிலும் நழுவாத போர்நெறி! எதிரியும் பாராட்டும் ஒழுக்கம்! எத்தனை தன்னம்பிக்கை! எத்தனை கோடி மக்களின் நம்பிக்கை! அத்தனையும் வீணானதே....! ஏன்....?

"பயங்கரவாதம்" என்று சொல்லிச் சொல்லியே எம்மை பயங்கரமாய் அழித்தீர்கள்!
ஒட்டுமொத்தமாய் அழிக்க சிங்களத்தோடு கூட்டுச் சேர்ந்து வந்தீர்கள்!
அன்று நாம் அழிக்கப்பட்டோம்! ஒட்டுமொத்த உலகத்தாலும் ஒதுக்கப்பட்டு சிதைக்கப்பட்டோம்!!
தமது சுதந்திர வாழ்வுக்கான விடுதலைக்காக வேற்றுவழியின்றி ஆயுத மேந்தியது பயங்கரவாதம் என சொல்லிச் சொல்லி ஒட்டுமொத்த இனத்தையுமே சிதைத்தீர்கள்.

அன்று களத்தில் எம்மை சிதைத்தீர்கள்... இன்று நீங்களே எம்மை உங்கள் மடியில் விதைத்திருக்கின்றீர்கள். பெரு விருட்சமாய் மீண்டும் எழுவோம்! உலகமே திரண்டாலும் நம் விடுதலை உணர்வை அடக்கமுடியாது. இப்போது நீங்கள் எம்மை பயங்கரவாதிகள் என்று சொல்லமுடியாது. உங்கள் கைகளில் உள்ள ஜனநாயக ஆயுதத்தினையே நாங்களும் இப்போது தாங்கி நிற்கின்றோம். அகிம்சை வழி நின்றோம்... பலனில்லை. மறவழி நின்றோம் ... கூடிவந்து சிதைத்தீர்கள். இப்பொழுது உங்கள் வழியில் நீங்கள் குறை கண்டுபிடிக்கமுடியாத அறவழியில் ஜனநாயக நெறியில் நாம் நின்று நம் உரிமையைக் கேட்கின்றோம். இப்பொழுது சர்வதேசம் பதில் சொல்லியே ஆகவேண்டும். எம்மை பயங்கரவாதிகள் என்று ஒதுக்கிவிட முடியாது. தமிழர்களுக்கு நீதியான பதில் சொல்லாமல் ஒதுங்கவும் முடியாது!

தமிழ் மக்களே! நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தல் வரும் மே மாதம் 2ஆம் திகதி நடந்தேற இருக்கின்றது. இவ்வாறான கட்டமைப்பென்பது நமக்கு நிச்சயம் அவசியமானது. கருத்துக் கொள்கை வேறுபாடுகள் பல இருந்தாலும் அவற்றினைத் திருத்தி தமிழீழம் என்ற ஒரே இலட்சியத்திற்காக பயணிக்க வேண்டியது தமிழர்களாகிய நம் அனைவரினதும் வரலாற்றுக் கடமை என்பது மட்டுமல்ல காலத்தின் கட்டாயமும் கூட. இதனை விமர்ச்சிப்பவர்களுக்கு சின்னச் சின்னதாய் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், இதனை ஆதரிப்பவர்களுக்கு நம் மாவீரர்கள் சுமந்த "தமிழீழ விடுதலை" என்ற ஒரேயொரு காரணம் மட்டுமே போதும். நமது மண்ணில் நிர்மாணிக்கப்பட்ட தமிழீழ அரசு இன்று சிதைக்கப்பட்டிருக்கலாம். ஆனாலும் புலத்தில் நாம் அமைக்கப்போகும் தமிழீழ அரசினை சிதையவிடாமல் ஒற்றுமையோடு காப்போமானால் இது கடல் கடந்து தாயகமண் திரும்பி தமிழீழ தனியரசினை உருவாக்கும் என்பது நிச்சயம்!

எனவே, வருகின்ற மே 2 இல் நடக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் அனைத்துத் தமிழர்களும் சேர்ந்து செயற்திறன்மிக்க, என்றுமே தமிழருக்காகவும் தாயக மண்ணுக்காகவும் பாடுபடக்கூடிய தகுதியான வேட்பாளர்களை தேர்ந்தெடுப்போம்! நாம் தற்போது தேர்ந்தெடுத்திருக்கும் அறவழியில் தொடர்ந்து போராடி நம் உரிமைகளை வென்றெடுப்போம்!

நாம் பயங்கரவாதிகளா???
தமிழர்களை பயங்கரவாதிகள் என்று கூறுவோரே! எம்முன்னே வாருங்கள்!!


தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

-பருத்தியன்-